கறிவேப்பிலையின் பயன்கள் -திருமலை
சமையலுக்கு சுவையும், மணமும் ஏற்படுத்துவது தாளிக்கும் முறை தான். தாளிப்பின் ராணி எனப்படுவது கறிவேப்பிலை. வீடுகளில் சமையல் செய்யும் போது கறிவேப்பிலையை எண்ணையில் போட்டுத் தாளிப்பர். அப்போது ஒரு வித நறுமணம் வீடு முழுவதும் பரவும். நாம் சாப்பிடும் போது குழம்பு அல்லது கூட்டுகளில் கறிவேப்பிலை கிடந்தால் அதனை எடுத்து கீழே போட்டு விடுகிறோம். அது தவறு. இந்த கறிவேப்பிலையைச் சாதாரணமாக நினைக்க வேண்டாம். மனிதனின் உடலுக்கு பல நன்மைகளை தரும் மருத்துவ குணமும் உடையது என்கிறார் ஸ்பைஸஸ் போர்டு பிரிவுச் செயலர்.
மேலும் கறிவேப்பிலையைப் பற்றி அவர் கூறும் போது, முராயா கோயனிகி என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட கறிவேப்பிலை இந்தியா, அந்தமான் தீவுப் பகுதிகளை பிறப்பிடமாகக் கொண்டது. இது இன்று உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உணவு மற்றும் பணப்பயிராக பயிரிடப் பெற்று வருகிறது என்கிறார்.
கறிவேப்பிலையில் 60 சதவீதம் நீர் சத்தும், 6.9 சதவீதம் புரதச் சத்தும், 5 சதவீதம் தாது உப்புக்களும், 6.3 சதவீதம் நார்ச் சத்தும் உள்ளன. இதிலுள்ள 'கோயினிகள்' என்ற வேதிப் பொருள் தான் மணம் ஏற்படுவதற்கு காரணம். தயாமின், நிகோடினிக் அமிலம் போன்ற வைட்டமீன்களும் கறிவேப்பிலையில் உள்ளன என்கிறார் இவர்.
கறிவேப்பிலையின் இலைகள், வேர், வேர்ப்பட்டை என அதன் அனைத்துப் பகுதிகளுமே மருத்துவ குணம் உடையவை. இதனுடைய மருத்துவப் பயன்கள் நம்மை வியக்க வைக்கின்றன. கறிவேப்பிலையை எடுத்து அதனுடன் தேங்காய் துண்டுகள், உப்பு, புளி சேர்த்து அரைத்து துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றிலுள்ள வாயுவை வெளியேற்றும். பசியைத் தூண்டும் தன்மையும் இதற்குண்டு என்கிறார்.
சிறிதளவு கறிவேப்பிலையுடன் கஸ்தூரி மஞ்சள், கசகசா பட்டை போன்றவற்றை சேர்த்து அரைத்து அம்மை நோயால் ஏற்பட்ட தழும்புகளில் தேய்த்து வந்தால் தழும்புகள் மறையும்.
கறிவேப்பிலை இலையில் சிறிது நீர் சேர்த்து சங்கைக் கொண்டு அரைத்து முகப்பருவில் தடவி வந்தால் பருக்கள் மறையும். தயிரில் கலந்து சாப்பிட்டால் சீதபேதி நோய் குணமாகும்.
தேங்காய் எண்ணையில் கறிவேப்பிலை இலைகளை போட்டு கற்பூரத்துண்டு சிறிது சேர்த்து பாட்டிலில் ஊர வைத்து பின் தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி கறுப்பாக இருப்பதுடன், உடலில் உள்ள பித்தம் , கிறுகிறுப்பு போன்ற நோய்களும் மறையும்.
கறிவேப்பிலை இலைகளை மென்று தின்று வந்தால் வயிற்றுப் போக்கு குணமடையும் என அதன் மருத்துவ குணங்களை விவரிக்கிறார் ஸ்பைஸஸ் போர்டு பிரிவு செயலர்.
சனி, 19 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்