ரைசோம் என்றும் சிஞ்சிபேரா என்றும் தாவரவியல் பெயரைக் கொண்ட இஞ்சிக்கு பூர்வீக நாடு இந்தியா. இந்தியாவில் பழங்காலம் முதலே உள்நாட்டு மருந்து தயாரிப்பில் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வருவது இஞ்சியைத்தான். இயற்கையின் சிறந்த கிருமி நாசியாக இஞ்சி கருதப்படுவதால் மக்களிடம் இஞ்சிக்கு அமோக வரவேற்பு இருந்து வருகிறது என்கிறார் ஸ்பைசஸ் போர்டு அதிகாரியான முகந்தன்.
இது குறித்து மேலும் அவர் கூறும் பொழுது.............
"கேரளம், மேகலயா, ஆந்திர பிரதேசம் மேற்கு வங்காளம் போன்ற இடங்களில் பயிரிடப்படும் இஞ்சி ஒரு சர்வரோக நிவாரணியாக கருதப்படுகிறது. ஆண்டு முழுவதும் எல்லாக் கால நிலைகளிலும் விளையக் கூடிய இஞ்சி கேரளாவில் தான் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது. இரும்பு, விட்டமின் சி, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களைக் கொண்ட இஞ்சியை பச்சையாக அல்லது உலர வைத்து சாப்பிட்டால் தலைவலி, ஜலதோசம், முச்சு அடைப்பு, தலைசுற்று போன்ற நோய்களுக்கு ஒரு இணையற்ற மருந்தாக அமையும். குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு புத்துணர்வையும் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் இயற்கையின் மருந்தாக இஞ்சி விளங்குகிறது" என்கிறார் முகந்தன்.
இஞ்சியை இன்னும் பல விதங்களில் பயன்படுத்தலாம் என கூறும் இவர் சில வழிகளையும் சொன்னார்:
1. ஒரு எலுமிச்சைப் பழச்சாறு சிறிது இஞ்சிச் சாறு அதனுடன் சிறிது தேன் கலந்து வெண்ணீரில் கலந்து அதனை இரவு படுக்கைக்குப் போகும் முன் குடித்து வந்தால் ஜலதோசம், மூக்கடைப்பு, தலைவலி போன்ற நோய்கள் பக்கத்திலேயே வராது. அதே போல் உடலுக்கு உற்சாகத்தையும் தரும்.
2. இஞ்சிச் சாறுடன் தேன் மட்டும் கலந்து நாள் ஒன்றுக்கு 3 முறை குடித்து வந்தால் வறண்ட நாக்கு, இருமல் போன்ற நோய்கள் வராது.
3.பச்சை இஞ்சியை சிறிய துண்டுகளாக வெட்டி,சிறிது துளசி சேர்த்து அதனை வெந்நீரில் கொதிக்க வைக்க வேண்டும். பின் இக்கலவை நன்கு கொதித்த பின் அதனுடன் சிறிது டீ துாள், இனிப்பு போட்டு வடி கட்டினால் நறுமணத்துடன் கூடிய இஞ்சி டீ கிடைக்கும். காய்ச்சல் தொண்டை வலி போன்றவை விரைவில் குணம் அடையும்.
4. கோடை காலத்தில் இஞ்சி சோடா தயாரித்து சாப்பிடுவதும் வீடுகளில் சமையல் செய்யும் பொழுது செய்யப்படுகின்ற பொறியல் அனைத்திலுமே முடிந்த அளவு இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டு பயன்படுத்துவது நல்லது .
பல ரகங்களைக் கொண்ட இஞ்சி வகைகளை வேளாண்மைத்துறை அறிமுகப்படுத்தினாலும் இந்தியாவில் வரதா ரக இஞ்சி தான் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது. 6 மாத காலங்களில் விளையக் கூடிய இந்த இஞ்சி இந்தியாவில் 75000 கெக்டேர் நிலப்பரப்பில் 65000 டன் விளைவிக்கப் படுகிறது. இதனைப் பொது மக்கள் தங்களின் வீட்டுத் தோட்டத்திலும் பயிரிட்டு பயன் பெறலாம்.
இஞ்சியை நன்கு உலர வைத்தால் கிடைக்கின்ற பொருள் தான் சுக்கு. இஞ்சியில் இருந்து கிடைக்கின்ற இந்த சுக்கும் பல வித மருத்தவ பயன்களை அளிக்கக்கூடியது.
நாகரிக உலகில் நாகரிகம் என்ற பெயரில் எதற்கெடுத்தாலும் நவீன மருந்துகளை நாடிச் செல்லாமல் இயற்கையின் பாரம்பரிய கொடையான இஞ்சியை முடிந்த அளவு பயன்படுத்தி உடல் ஆரோக்கியம் பெறுவோம். நோய் நொடி இல்லாமல் வாழ்வோம் என்கிறார் ஸ்பைசஸ் போர்டு அதிகாரியான முகந்தன். ஸ்ரீ
Disclaimer: இப்பகுதியில் இடம் பெறும் கட்டுரைகள் எமது வாசகர்கள் அவர்களின் அனுபவத்தையோ படிப்பறிவையோ அடிப்படையாகக் கொண்டு எழுதியவை. இந்தக் கட்டுரைகளின் நம்பகத்தன்மைக்க "தாருல் ஸஃபா” பொறுப்பல்ல. இவற்றை செயற்படுத்துமுன் மருத்துவரின் ஆலோசனை பெறுவது நலம்.
சனி, 19 செப்டம்பர், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்