திங்கள், 26 அக்டோபர், 2009

3700 ஆண்டுகளுக்கு முன்… தமிழர் நாகரீகம்.





தமிழின் தொன்மை வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது என்கிறார் தொல்லியல் ஆய்வாளரும், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான டி.கே.வி.ராஜன். அதற்கான ஆதாரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில், ஆதிச்சநல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட பண்டைப் பொருட்கள் பற்றிய கண்காட்சி ஒன்றினை நடத்தியிருக்கிறது. அவரால் நிறுவப்பட்டிருக்கும் இந்தியன் சயின்ஸ் மானிட்டர் என்ற அமைப்பு.

திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் 24 கி.மீ. தென்கிழக்கில் அமைந்துள்ளது ஆதிச்ச நல்லூர். இங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே ஆய்வு நடத்திய தொல்லியலாளர் அலெக்சாண்டர்ரீ ஆதிச்சநல்லூர் மனித நாகரீகத்தின் தொட்டில் என்று குறிப்பிட்டிருக்கிறார். அவ்விடத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற அகழவாய்வுகள் அறிவியல் ரீதியில் விளக்கத்தக்க உண்மைகளை உலகுக்குக் காட்டியிருக்கின்றன. ஆதிச்சநல்லூரில் பல முதுமக்கள் தாழிகளும், பானை ஓடுகளும் மண்பானை வகைகளும் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இந்த பானை ஓடுகளை, காலத்தைக் கணிக்கும் நவீன அறிவியல் முறையான தெர்மோ லூமினெசன்ஸ் என்ற முறையில் ஆய்வுக்குட்படுத்தினர். இதன் முடிவு பானைகளின் காலம் கி.மு.1700 ஆண்டுகள் என்று கூறுகிறது.

அதாவது 3700 ஆண்டுகளுக்கு முந்தைய ஓடுகள் அவை என்பது உறுதியாகியிருக்கிறது.

இந்தக் காலத்தைக் கணித்த அறிவியலார், இதுவரை கிடைத்த பானை ஓடுகளில் இதுவே மிகப்பழைமையானது என்பதால் மண் பாண்டங்கள் செய்யும் தொழில் முறை தமிழகத்தில் இருந்துதான் உலகுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்கிறார்கள். கி.மு.1700 என்பது கடைசிகட்ட காலமே! அதற்கு பல நூற்றாண்டுகள், முன்பே இந்தத் தொழில்முறை உருவாகியிருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள்.

மேலும், இங்குக் கிடைத்திருக்கும் வெண்கல பாண்டங்களை ஆய்வு செய்யும் போது, உலோகங்களை உருவாக்க அடிப்படையான ஆர்சனிக்கைப் பயன்படுத்தியிருப்பது தெரிய வருகிறது. இந்த முறையை மொகஞ்சதாரோ ஹரப்பா மக்களும் பயன்படுத்தியிருக்கின்றனர். எனவே, கால அளவில் ஆதிச்சநல்லூரும், ஹரப்பாவும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன என்கிறார் ராஜன். சிந்து சமவெளி நாகரீகம் என்பது திராவிடர் நாகரீகமே என்ற கருத்தை மறுக்க, மாற்றியெழுதத் துடிக்கும் பார்ப்பன ஆய்வாளர்களுக்கு சரியான பதிலடியாக இது அமைந்திருக்கிறது. சிந்து நாகரிகத்தில் கிடைத்த ஓவியங்களில் காளையைக் குதிரையாக்கி அதை ஆரிய நாகரிகமென்று நிறுவத்துடிப்போருக்கும் இத்தகைய ஆதாரங்கள் பதில் தருகின்றன.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்பானை ஓடுகளின் மீதான ஓவியம் தான் இதுவரை இந்தியாவில் கிடைத்துள்ள ஓவியங்களில் மிகப் புராதனமானது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது ஆதிச்ச நல்லூர் ஒரு பெரிய வியாபார ஸ்தலமாக இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. அதேபோல இந்த ஓவியங்களில் இருக்கும் பொருள் சங்க இலக்கியமான பரிபாடலின் கருத்தை ஒட்டிவருகிறது. எனவே, 3700 ஆண்டுகளுக்கு முந்தையதாக சங்க இலக்கியத்தின் காலமும் இருந்திருக்க வேண்டும். எனவே, கடைச்சங்கம் என்பதை கி.மு.3ஆம் நூற்றாண்டு என்பதாக நாம் இப்போது தவறாகக் கணித்து வருகிறோம் என்று பொருள். எனவே, அதற்கு முந்தைய முதற்சங்கம், இடைச்சங்கம் என்பதன் காலமெல்லாம் திருத்தி யெழுதப்பட வேண்டியவையே. அவை இன்னும் பழங்காலத்தவையே என்ற வரலாற்றுண்மையை அறிவியல் முடிவுகளோடு நாம் உலகுக்கு சொல்ல வேண்டிய காலகட்டம் இது என்று மீண்டும் எடுத்துரைக்கிறார் அவர்.

ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்பாண்ட, வெண்கலப் பானைகளைக் கொண்டு 100 ஆண்டுகளுக்கு முன் தன் ஆய்வின் நிறைவில் அய்ரோப்பாவில் கண்காட்சியாக வைத்தாராம் அலெக்சாண்டர்ரீ. அப்போது, கருப்பர் நாட்டில் இத்தனை ஆண்டுகளுக்கு முன் இப்படியொரு வளர்ச்சியா என்று வெள்ளையர்கள் வியந்தனராம்.

மேலும், அங்குக் கிடைத்த எலும்புத்துண்டுகள் மண்டை ஓடுகள் இவற்றைக் கொண்டு பார்க்கும் போது ஆதிச்ச நல்லூரில் வாழ்ந்த ஆண்கள் சுமார் 6 அடி உயரத்துடனும், பெண்கள் 5 அடி 4 அங்குலம் வரையிலும் இருந்திருக்கிறார்கள். நல்ல உறுதியான உடல் வளத்துடன் தான் தமிழனும், தமிழச்சியும் இருந்திருக்கிறார்கள் என்பதை இவற்றைக் கொண்டு உறுதி செய்ய முடிகிறது.

அங்குக் கிடைத்த மண்டை ஓட்டில் துளை ஒன்று இருக்கிறது என்று அதைச் சுட்டிக்காட்டிய திரு.ராஜன் அது நோயாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. ஆனால் அந்த எலும்புக் கூட்டின் வயது 65 ஆண்டுகள். நோயிருந்தால் அவ்வளவு காலம் வாழ்ந்திருக்க முடியுமா என்பது சந்தேகம். அதனால் அது மூன்றாவது கண்ணாக இருக்குமோ என்றும் சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள். உடனே நீங்கள் திருவிளையாடல் சிவனுக்குப் போய் விடாதீர்கள். இது அறிவியலால் நிரூபிக்கவிடவில்லை. அதுவரை இது ஒரு சுகமான கற்பனையே! ஆனால் அவர்களால் காதுகளை தன்னிச்சையாக ஆட்ட முடியுமாம். அதற்கான உடற்கூறு இருப்பதை அறிவியல் உறுதி செய்கிறது. ஆதிச்சநல்லூரின் அழிவு எதனால் நிகழ்ந்ததென்று தெரியவில்லை. அவர்களுடைய எலும்புகளில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருக்கின்றன. கடும் போர் கூட அழிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்று குறிப்பிட்ட திரு.ராஜன் ஆதிச்சநல்லூரின் மக்களின் உடற்கூறுகளையும், லெமூரியாக் கண்டத்தின் மக்கள் இப்படி இருக்கக்கூடும் என்று நம்பிய உடற்கூறுகளும் ஒத்துப் போகிறது என்ற கூடுதல் தகவல்களையும் சொன்னார்.


லெமூரியா என்பது லெமூர் என்ற விலங்கின் பெயரைக் கொண்டு உருவானது. லெமூர் என்பது நம்மூரில் இப்போது மிகவும் குறைந்துவிட்ட தேவாங்கு எனப்படும் விலங்கைப் போன்றது. இந்தத் தேவாங்கு விலங்கினம், தமிழகத்தில் இருக்கிறது. அதே போல மடகாஸ்கரில் இருக்கிறது. இடையில் எங்கும் இல்லை. இவ்வளவு கடற்பரப்பை நீந்தியா கடந்திருக்க முடியும்? என்ற கேள்வியின் அடிப்படையில் தான் லெமூரியா என்ற சிந்தனை பிறந்தது. ஆனால் நம் பழந்தமிழ் இலக்கியங்களில் அழிந்துவிட்ட கபாட புரமும், தென்மதுரையும், பஃருளியாலும் பரவிக்கிடக்கின்றன.

லெமூரியா என்பது கற்பனை என்று வாதிடுவோரும் சிலர் இருக்கிறார்கள். ஆனால், கன்னியாகுமரிக்கும், மடகாஸ்கருக்கும் நடுவே பயணம் செய்த கப்பல் ஒன்று. கடலுக்கடியில் நிறைய புவியியல் இடையூறுகள் (னுளைவரசயெஉநள) இருப்பதை உணர்ந்து சொல்லியிருக்கிறது. முறையான கடலாய்வு மேற்கொண்டால் அது பற்றிய தகவல்கள் நிறையக் கிடைக்கக்கூடும். இன்றும் பெர்முடா முக்கோணம் பற்றிய ஆய்வை பலர் மேற்கொண்டு வருகிறார்கள். இன்றைய அறிவியல் வளர்ச்சியில் லெமூரியா எனப்படும் குமரிக்கண்ட ஆய்வு சாத்தியப்படக் கூடிய ஒன்று தான்.

அண்மைக் காலத்தில் சங்க காலத்து அரசர்களின் இலச்சினை மற்றும் பெயர் பொறிக்கப்பட்ட நாணயங்கள் கிடைத்துள்ளன. சேரன், செங்குட்டுவனின் அரிய காசு ஒன்றை நாணயவியல் ஆய்வாளர் இரா. கிருஷ்ணமூர்த்தி கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் ரோமானியர் வருகைக்குப்பின் தான் நாணயப் புழக்கம் ஏற்பட்டது. அதற்கு முன்பு பண்டமாற்று முறைதான் இருந்தது என்று நாம் நினைத்திருந்த வரலாறு மாறுகிறது. அதைத் திருத்தி எழுத வேண்டியதன் அவசியமும் வலுப்படுகிறது என்கிறார் உறுதியாக! வடநாட்டு ஆய்வாளர்களும், இந்தியத் தொல்லியல் துறையும் தென்னாட்டின் அகழாய்வில் விருப்பம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருக்கிறது. சமஸ்கிருதத்தையும், வேத நாகரிகத்தையும் முன்னிறுத்தக்கூடிய வடநாட்டு முயற்சிகளுக்கு சரியான பதிலடியும், உண்மையான வரலாற்றை எடுத்துரைப்பதும் விரிவான அகழாய்வுகளை தமிழ்நாட்டில் நடத்துவதன் மூலமே சாத்தியப்படும்.



உலகின் முன் தோன்றிய மூத்த குடி என்று வெறும் சங்க இலக்கியங்களில் பெருமை கொள்வதல்லாமல், அறிவியல் மற்றும் வரலாற்று அடிப்படையில் அதை நிறுவுவதே அறிவார்ந்த செயலாகும்.

நன்றி - உண்மை இதழ். எப்படி தமிழன் வரலாறு
படித்துவிட்டு கருத்தை பதியவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்